Monday, May 29, 2006

GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

கடிதத்தின் மூன்றாம் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !

தோழனுக்கு ஒரு கடிதம் --- பகுதி 4
***************************************


என் அன்புக்குரிய ப்ரீதம்,

பொறியியற் படிப்பு முடிந்ததும், உனக்கு பெங்களூரில் நல்ல வேலை கிடைத்தது. நான் சில மாதங்கள் மும்பையில் ஒரு நுண்ணணுவியல் பத்திரிகையில் பணி புரிந்து விட்டு பின் பெங்களூரில் ஒரு பொது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மீண்டும், அரட்டை, சினிமா, ஊர் சுற்றல் என்று மாலைப் பொழுதுகளை ஜாலியாகக் கழித்தோம். கல்லூரிக் காலத்தில், வந்தனாவைப் பற்றிய உனது உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத நீ, ஓர் இரவுக் காட்சி பார்த்து விட்டு திரும்பும்போது, ஓர் இந்திரா நகர் பூங்காவில் அவள் மேல் உனக்கிருந்த காதலை ஒப்புக் கொண்டாய். அக்காதலை சில காரணங்களுக்காக அவள் நிராகரித்ததையும் சுயபச்சாதாபத்துடன் கூறினாய். அந்த நேரம் ஒரு புதியவனாக நீ எனக்குத் தோன்றினாய்! அந்த புறக்கணிப்பு உன்னிடம் ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியிருந்ததையும் என்னால் உணர முடிந்தது.

அந்த இந்திரா நகர் பூங்காவில், பெங்களூரின் குளிரிரவுப் பொழுதுகளில், கலீல் கிப்ரான் கவிதைகள், உன் ஆன்மீகத் தேடல்கள், எதிர்கால லட்சியங்கள், அப்போது நீ ஈடுபட்டிருந்த மென்பொருள் உருவாக்கம் என்று பல விடயங்கள் குறித்து ஒரு வித லயிப்புடன் நீ பேசியதை, நேரம் போவது தெரியாமல் நான் கேட்டிருக்கிறேன்! உனக்கு நினைவிருக்கிறதா ? பிரிகேட் சாலையில் இருந்த "The Pub"-இல், பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு வைர வியாபாரியிடமும், அவரது ஆப்பிரிக நண்பரிடமும் உன்னை நீயே அறிமுகப்படுத்திக் கொண்டு, உன் பேச்சுத்திறனை மூலதனமாக்கி, அவர்களை குடுவை குடுவையாக பீரும், நொறுக்குத் தீனியும் வாங்கித் தர வைத்த உன் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்ல !

நான் ONGC-யில் வேலை நிமித்தம் மீண்டும் மும்பை சென்று விட்ட பின், ஒரு சில அற்புதமான கடிதங்களை எனக்கு நீ எழுதியிருக்கிறாய். அவை, இன்னும் என் வசம் பத்திரமாகவே உள்ளன. உன் சுபாவத்திற்கு தகுந்தாற் போல், பெங்களூர் வேலையை உதறி விட்டு, சென்னையில் ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தாய். பணி நிமித்தம் நீ ஒரு தடவை (1987) மும்பை வந்தபோது ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, உன்னை நான் இதுவரை பார்க்கவில்லை. நீ எங்கிருக்கிறாய் என்பதை நான் அறிந்தும், நமது அடுத்த சந்திப்பிற்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை எனக்கு !

உன்னைப் பற்றி சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரியப் பெற்றேன். புட்டபர்த்தி சாய்பாபாவிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட நீ, புட்டபர்த்தியில் அமைந்துள்ள 'Sai Institute of Technology' யில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தது பற்றியும், சாய்பாபாவின் நேர்காணலுக்காக பல லட்சம் பேர் காத்திருந்த வேளையில், அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க, அவரிடம் பேச உனக்களிக்கப்பட்ட சலுகை குறித்தும், அங்கு ஆன்மீகத்தில் உன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒரு யோகி போல் வாழ்ந்தது குறித்தும் கேள்விப் பட்டேன்.

நீ எனக்குப் பரிசாக வழங்கிய ஒரு புத்தகத்தில் நீ எழுதிக் கொடுத்த "BETWEEN HERE AND THERE, IS ETERNITY, BETWEEN NOW AND THEN, IS INFINITY!" என்ற அற்புதமான வாசகத்தை நினைவு கூர்ந்து இந்த மடலை நிறைவு செய்கிறேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா
**********************************

EPILOGUE:

நண்பன் நாராயணன் IES-இல் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று தொலைப்பேசித் துறையில் சீனியர் டிவிஷனல் பொறியாளராக உயர்ந்து, பின் அதை விடுத்து, தற்போது பூனாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். ஆனால், பேச்சில், அடக்கத்தில் அதே பழைய 'நாரி' தான்!

'மொட்டை' ஷியாம், ஓமானில் சில ஆண்டுகள் வேலை செய்து விட்டு, தற்போது Bahwan's குரூப்பைச் சார்ந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் உயர் பதவியில் இருக்கிறான். இன்றும் சனி ஞாயிறுகளில் கிரிக்கெட் விளையாடுகிறான்!

'Badoo' என்கிற செல்வராஜ் சிறிது காலம் HCL-இல் பணி புரிந்து விட்டு, கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் தன் மனைவியோடும் (அவனது மாமா பெண் தான்!) இரு மகள்களோடும் வாசம் செய்கிறான்! ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் டைரக்டராக வேலை!

GS என்கிற ஸ்ரீராம் மும்பையில் சில வருடங்கள் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று MS படித்து முடித்து, நல்ல வேலை கிடைத்து, திருமணமாகி, மனைவியுடனும், மகனுடனும், முன்போலவே நண்பர்களிடம் 'கடி' ஜோக்குகள் சொல்லிக் கொண்டு, டென்வரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.

'Vasco' என்கிற வசந்த்குமார், IIM, கல்கத்தாவில் மேலாண்மை படிப்பை முடித்து, பின் NIIT-இல் பணி புரிந்தபோது ஒரு முறை சிறந்த மேலாளருக்கான விருது வென்று, பணி நிமித்தம் பல வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் பெற்று, தற்போது கலிபோர்னியாவில் 'ORACLE' நிறுவனத்தில் ப்ராஜெக்ட் டைரக்டராக இருக்கிறான். தலைமுடியில் முக்கால்வாசி இழந்திருந்தாலும், குணத்தில் அதே பழைய வசந்த் தான்!

'ராம்ஸ்' என்கிற ராமச்சந்திரன் சிறிது காலம் ISRO நிறுவனத்தில் வேலை செய்து விட்டு, MS படிக்க அமெரிக்கா சென்றதிற்கு பின்னால் அவனுடன் தொடர்பு இல்லை. அவன் ஹிப்பி வாழ்க்கை வாழ்வதாக நண்பன் ஒருவன் மூலம் கேள்விப் பட்டேன்.

எங்களுக்கு வகுப்பெடுத்த LP மேடம் இப்போது GCT கல்லூரியில் நுண்ணணுவியல் துறைக்கு தலைவராக உயர்ந்துள்ளார்!

இறுதியாக, எனது இந்த மிக நீண்ட கடிதத்தின் நாயகனான, என்னுயிர் சிநேகிதன் ப்ரீதம் இன்று உயிருடன் இல்லை! எங்களது கடைசி மும்பை சந்திப்பு (1987) நிகழ்ந்து பல மாதங்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு விடுமுறைக்காக வந்தேன். அவன் ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்ட செய்தியை Obituary-யில் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது! நானும் ஷியாமும் அவன் தாயாரை சந்தித்துப் பேசியபோது, பெங்களூர் ஒயிட்·பீல்ட் அருகே ஒரு வேனில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே ப்ரீதம் உயிரிழந்ததை அவர் கண்ணீருடன் கூறினார். நெற்றியின் பக்கவாட்டில் கூர்மையான ஏதோ ஒன்று துளைத்த ரத்தச் சுவடோடும், வலியை வென்ற மெல்லிய புன்னகையைத் தேக்கிய உதடுகளோடும் ப்ரீதம் இறந்து போனதையும், அதே வேனில் பயணம் செய்த தான் காயங்களோடு உயிர் பிழைத்ததையும் சொல்லி அவர் கலங்கியபோது, கடவுள் மீதே அசாத்திய கோபம் வந்தது. ப்ரீதம் தனது டைரியில் கடைசியாகப் பதித்திருந்த, "THIS LIFE IS LIKE WALKING ON A RAZOR'S EDGE!" என்ற வாசகம் என் நெஞ்சில் ஒரு வடு போல் தங்கி விட்டது.

ப்ரீதம் இறந்த சில மாதங்களில், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற வந்தனாவும், ஒரு கோரமான கார் விபத்தில் இறந்து போனதை என்னவென்று சொல்வது !

(முற்றும்)

7 மறுமொழிகள்:

ramachandranusha(உஷா) said...

பாலா,முதல் பாகத்தில் போட்ட பின்னுட்டம் நினைவிருக்கா?

enRenRum-anbudan.BALA said...

உஷா,
நல்லா நினைவிருக்கு !!!
நீங்கள் ரொம்ப கெட்டிக்காரர் என்று எனக்கு முன்னமே தெரியும் :)

இது
http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_08.html
http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_09.html
உங்களுக்கு ஞாபகம் இருக்கா ;-)

SurveySan said...

SSSSS. very touching!

nicely written.

Sridhar Narayanan said...

அருமையான கடிதங்கள். உங்கள் நினைவலைகள் பல தளங்களில் என்னை பயனிக்க வைத்தன. இம்மாதிரி பல சந்தர்ப்பங்களில் நன்பர்களோடு அளவளாவியது நினைவுக்கு வந்தது. என்னமோ இப்பொழுது அதையெல்லாம் சற்று இழந்தவிட்டது போல... என்ன சொல்வது.

உங்கள் நன்பரின் ஆன்மா சாந்தி அடைவதாக.

பகிர்தலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

K.R.அதியமான் said...

அருமையான கடிதம் பாலா. கடைசியில் ஒரு ஷாக். மனபாரத்தை கொடுத்துவிட்டீர்கள்.

நானும் கோவை (KCT)குமரகுரு கல்லுரிதான். (1986-90). அதே சென்ட்ரல் தியாட்டர், etc...

GCTய Girls Collage of Technology என்போம். ஒரே மகளீர் அணி....

enRenRum-anbudan.BALA said...

அதியமான், Surveysan, Sridhar Venkat,
வாசிப்புக்கும், பாராட்டுக்கும் நன்றி.

said...

Very touching post... It is always a gr8 feeling to share the OLD and SWEET memories... Vey Nice...

Infact, I am also a GCT-ian...

Satheesh.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails